பாகிஸ்தான் கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல், 8 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

Update: 2017-12-17 09:34 GMT
கராச்சி/இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குயிட்டா நகரில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற போது ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினர். பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற பாதுகாப்பு படை அவர்களுடன் சண்டையிட்டது. பயங்கரவாதிகளில் ஒருவன் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகினர், 20 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இரண்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர் என்றும் அவர்களை தேடும் பணி நடக்கிறது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை, முன்னதாக அங்கு சிறுபான்மையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாத இயக்கம் தாக்குதல் முன்னெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட உள்ளநிலையில் கிறிஸ்தவ ஆலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு பெரும் பதற்றைத்தை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலை அடுத்து குயிட்டாவில் உள்ள மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு படை நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்