குறுகிய கால செலவின மசோதா தோல்வி அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் மூடல்

குறுகியகால செலவின மசோதா தோல்வி கண்டதால், அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் நிதி ஒதுக்கீடு இன்றி மூடப்பட்டன.

Update: 2018-01-20 23:45 GMT
வாஷிங்டன், 

சிறுவயதிலேயே அமெரிக்காவுக்கு தங்களது பெற்றோர்களால் உரிய ஆவணங்கள் இல்லாமல் அழைத்து வரப்பட்டு, குடியேறியவர்கள் ‘டிரீமர்ஸ்’ என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி 7 லட்சம் பேருக்கு அதிகமாக அங்கு உள்ளனர். அவர்களுக்கு ஒபாமா ஆட்சிக்காலத்தில் பொது மன்னிப்பு வழங்கி ‘டாகா’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அந்த திட்டத்தை தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்து உள்ளார். இதனால்  ‘டிரீமர்’களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆனது. அவர்களில் இந்தியர்களும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்படும் ஆபத்து உள்ளது.

இதில் எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சிக்கு உடன்பாடு இல்லை. டிரம்ப் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. 

மசோதா நிறைவேறுவதில் சிக்கல்

இந்த நிலையில், அமெரிக்க அரசுக்கு அடுத்த மாதம் 16–ந் தேதி வரையிலான செலவுகளுக்கு நிதி அளிப்பதற்கான செலவின மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (மக்கள் பிரதிநிதித்துவ சபை) கடந்த வியாழக்கிழமை நிறைவேறியது.

ஆனால் இந்த மசோதா மேல்சபையான செனட் சபையில் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆதரவு இல்லாமல் மசோதாவை நிறைவேற்ற முடியாது என்ற சூழல் உருவானது.

‘டிரீமர்ஸ்’ விவகாரத்தில் டிரம்ப் தனது முடிவை மாற்றாததால், நிதி மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது இல்லை என்று ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் முடிவு எடுத்தனர். கடைசி நிமிடத்தில் சமரசம் காண முயற்சிகள் நடந்தன. ஆனால் அவை தோல்வி அடைந்தன.

மசோதா தோல்வி

இதன்காரணமாக செலவின மசோதா நேற்று சென்ட் சபை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 50 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 48 ஓட்டுகள் கிடைத்தன. ஆதரவாக 60 ஓட்டுகள் கிடைத்தால்தான் மசோதா நிறைவேறும்.

ஜனாதிபதி சார்ந்துள்ள குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் நாடாளுமன்றம் இருந்தும், இப்படி நிதி மசோதா தோல்வி கண்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். 

மசோதா தோல்வி அடைந்திருப்பதற்கு ஜனநாயக கட்சியை குடியரசு கட்சி குறை கூறியது. ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையும் ஜனநாயக கட்சியை சாடியது. இதுபற்றி வெள்ளை மாளிகை கூறும்போது, ‘‘ நமது தேச பாதுகாப்பு, ராணுவ குடும்பங்கள், பாதிக்கப்படும் குழந்தைகள், அனைத்து அமெரிக்கர்களுக்கு சேவை செய்கிற வாய்ப்பு எல்லாவற்றையும் கடந்து அரசியலுக்கு ஜனநாயக கட்சியினர் முக்கியத்துவம் தந்து விட்டனர்’’ என்று கூறியது.

ஆனால் ஜனநாயக கட்சி தலைவர் சக் சூமர், ‘‘இரு தரப்பு சமரச உடன்பாடுகளை ஜனாதிபதி ஏற்க மறுத்து விட்டார்’’ என்று கூறினார்.

அரசு எந்திரம் முடங்கியது

செலவின மசோதா நிறைவேறி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாததால், அரசு துறைகளுக்கு நிதி வழங்க முடியாத சூழல் உருவானது. இதனால் நேற்றே அரசு எந்திரம் முடங்கிப்போனது. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.

அமெரிக்க அரசின் 8 லட்சம் அதிகாரிகள், ஊழியர்கள் அலுவலகம் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். அவர்களுக்கு சம்பளம் கிடையாது. மிகவும் அத்யாவசியமான பணிகள் மட்டுமே நடைபெறும்.

குறிப்பாக பாதுகாப்பு, அஞ்சல், விமான போக்குவரத்து கட்டுப்பாடு, உள் நோயாளிகள் மருத்துவ சேவை, அவசரகால புற நோயாளிகள் மருத்துவ சேவை, இயற்கை பேரிடர் மேலாண்மை, சிறை, வரி, மின்உற்பத்தி துறைகள் மட்டும் செயல்படும்.  விசா, பாஸ்போர்ட் பணிகளில் தாமதம் ஏற்படும்.

அரசு எந்திரம் செயல் இழந்து இருப்பது வார இறுதி நாட்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும்கூட, நாளை (திங்கட்கிழமை) முதல் அதன் வீரியத்தை உணர முடியும் என தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவில் கடைசியாக ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 நாட்கள் அரசு எந்திரம் முடங்கிப்போனது. அப்போது ‘ஒபாமா கேர்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தை குடியரசு கட்சி எதிர்த்ததால் சிக்கல் உருவானது என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்