ஈராக்கில் ஜெர்மனி நாட்டு பெண்ணுக்கு மரண தண்டனை

ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கை தங்களின் புகலிடமாக கொண்டு உள்ளனர். #German #Iraq

Update: 2018-01-22 22:30 GMT
பாக்தாத்,

ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கை தங்களின் புகலிடமாக கொண்டு உள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஐ.எஸ். இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டு, தங்கள் நாட்டை விட்டு வெளியேறி சிரியா மற்றும் ஈராக் சென்று தங்களை அந்த இயக்கத்தில் இணைத்து கொள்கின்றனர்.

அப்படி ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஐ.எஸ். இயக்கத்தில் இணைவதற்காக சிரியா சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து ஈராக் சென்றார்.

மொராக்கோவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய 2 மகள்களையும், பயங்கரவாதிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அவர் ஈராக்கின் மொசூல் நகரில் தங்கி இருந்து பயங்கரவாதிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகரை ஈராக் ராணுவம் மீட்டது. அப்போது அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருந்த ஜெர்மனிய பெண் உள்பட வெளிநாட்டினர் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து அந்த ஜெர்மனிய பெண் மீது வழக்கு தொடரப்பட்டு பாக்தாத் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அதில் அந்த ஜெர்மனிய பெண் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்