சீனாவில் 4 பேர் குத்திக்கொலை ஒருவர் கைது

சீனாவில் 4 பேர் குத்திக்கொலை செய்யப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-25 21:15 GMT

பீஜிங்,

சீனாவின் ஹுனான் மாகாணத்துக்கு உட்பட்ட சிக்சிங் நகரில் யுவான் (வயது 53) என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவரது வீட்டில் யுவானுக்கும், மேலும் சிலருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த யுவான் கத்தியை எடுத்து 4 பேரையும் சரமாரியாக குத்தினார்.

இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். படுகாயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இறந்தார்.

இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் யுவானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் சமீப காலமாக இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் ஒரே மாதத்தில் நடந்த 2–வது சம்பவம் இதுவாகும்.

கடந்த 11–ந்தேதி பீஜிங்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்தில் ஈடுபட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 12 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்