’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ அலுவலகத்தில் சோதனையிட லண்டன் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக தகவல் திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ நிறுவனத்தை முழு சோதனையிட லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CambridgeAnalytica

Update: 2018-03-24 01:47 GMT
லண்டன்,

உலக மக்களின் பேராதரவை பெற்ற சமூக வலைத்தளமாக ‘பேஸ்புக்’ என்னும் முகநூல் திகழ்கிறது. ஏறத்தாழ 200 கோடிக்கு மேற்பட்டோர் இதை பயன்படுத்தி தகவல்கள், படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் செயல்படுகிற தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனமான ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ 5 கோடிப் பேரின் தகவல்களை திருடி உள்ளது. 

இந்த தகவல் திருட்டு, 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி நடந்து உள்ளது. இது குறித்த தகவல்கள் வெளியாகி உலக அரங்கை உலுக்கி உள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக தகவல் திருடிய  ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ வழக்கை விசாரித்து வந்த லண்டன் தகவல் ஆணையர் எலிசபெத் டென்ஹம், நிறுவனத்தின் அலுவலகத்தை முழு சோதனையிட லண்டன் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். 

இதற்கு ஒப்புதல் அளித்த லண்டன் நீதிமன்றம், தகவல் திருட்டு தொடர்பான முழு விபரத்தையும் மார்ச் 27 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் சேனல் 4 வெளியிட்ட தகவல் திருட்டு தொடர்பான செய்தியின் வாயிலாக, ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’வின் தலைமை நிர்வாகி அலெக்ஸாண்டர் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே வேளையில் இந்த நம்பிக்கை மோசடிக்காக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள அதிபர் ஜூக்கர் பெர்க் மன்னிப்பும் கேட்டுக்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்