சிங்கப்பூரில் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ தலைமையில் நடந்தது

சிங்கப்பூரில் சீனிவாசபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங் தலைமையில் நடந்தது.

Update: 2018-04-23 23:00 GMT
சிங்கப்பூர், 

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 1854-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவில் சிங்கப்பூரின் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. எனவே இது தேசிய நினைவுச்சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 164 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் 3.4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.22 கோடி) செலவில் கடந்த 1½ ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. இந்தியாவில் இருந்து சென்ற 20 ஸ்தபதிகள் இந்த திருப்பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து மாபெரும் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பல்வேறு பூஜை, வழிபாடுகள் மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் 45 நாட்கள் நடந்த மண்டலாபிஷேகம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இறுதிநாளான அன்று கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த விழாவுக்கு பிரதமர் லீ சியன் லூங் தலைமை தாங்கினார். அவருடன் 4 மந்திரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த மிகப்பெரும் இந்த கும்பாபிஷேக விழாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்