3 மாதங்களில் 58 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் மூடல்

உலகமெங்கும் பெரும் செல்வாக்கைப் பெற்று வந்த ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம், சர்ச்சையில் சிக்கியது.

Update: 2018-05-16 22:45 GMT

பாரீஸ்,

பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் சுமார் 8¾ லட்சம் பேரின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டதுதான் இதற்கு காரணம்.

இதற்காக ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அத்துடன், இனி இப்படி நேராமல் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் வரையில், 3 மாதங்களில் மட்டும் 58 கோடியே 30 லட்சம் போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் மூடப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

வெளிப்படைத்தன்மையுடன் ‘பேஸ்புக்’ நிறுவனம் நடந்து கொள்ள வேண்டும் என்ற பல தரப்பிலும் குரல்கள் எழுந்த நிலையில், இப்போது இந்த தகவல்களை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

இருப்பினும் மொத்த ‘பேஸ்புக்’ கணக்குகளில் 3 முதல் 4 சதவீதம் வரையிலான கணக்குகளில் போலி சுய தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி உள்ளது.

மேலும் பலருக்கும் கண்மூடித்தனமாக அனுப்பப்பட்ட (ஸ்பேம்) 83 கோடியே 70 லட்சம் பதிவுகள், 3 மாதங்களில் அகற்றப்பட்டு உள்ளதாகவும் ‘பேஸ்புக்’ நிறுவனம் சொல்கிறது.

25 லட்சம் வெறுப்புணர்வு பேச்சுகளையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்து உள்ளது.

செக்ஸ் மற்றும் வன்முறை படங்கள் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ததற்காக 3 கோடி பதிவுகளுக்கு ‘பேஸ்புக்’ எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.

மேலும் செய்திகள்