ஆப்கன் அதிபர் அறிவித்த சண்டை நிறுத்தத்துக்கு தலீபான் பயங்கரவாதிகளும் ஒப்புதல்

ஆப்கன் அதிபர் அறிவித்த சண்டை நிறுத்த அறிவிப்பை தலீபான் பயங்கரவாதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

Update: 2018-06-09 05:46 GMT
காபூல்,

அமெரிக்க நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் நகர உலக வர்த்தக மையம் மீதும் விமானங்களை மோதி பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடந்த இந்த தாக்குதல்கள், உலக வரலாற்றின் கருப்பு அத்தியாயம் ஆகும்.

இந்த தாக்குதல்களை தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் போரின் மூலம் அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலீபான்களை அமெரிக்கா விரட்டியடித்தது. அதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையிலான அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தலீபான் பயங்கரவாதிகள் ஆயுதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆதிக்கமும் செலுத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு மட்டும் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 25 நாடுகள் கலந்துகொண்ட அமைதி மாநாடு நடந்தது. அதில் அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனி பங்கேற்று பேசியபோது, தலீபான் பயங்கரவாதிகளை நிபந்தனையற்ற நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அத்துடன் போர் நிறுத்தம் செய்யும் திட்டத்தையும், கைதிகளை விடுவிக்கும் திட்டத்தையும் அவர் வெளியிட்டார். அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை ஆராய்ந்து மாற்றி அமைக்கவும் அவர் முன் வந்தார்.

ஆனால் தலீபான் பயங்கரவாதிகள் அதை ஏற்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அமெரிக்க கூட்டுப்படையினரையும், உள்நாட்டுப் படையினரையும், போலீஸ் படையினரையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், நோன்புக்காலம் முடியும் வரையில் (ஜூன் மாதம் 20-ந்தேதி) தலீபான்களுடன் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என்று அதிபர் அஷ்ரப் கானி அறிவித்தார். 

இந்த நிலையில், ரம்ஜான் நோன்பு காலத்தை முன்னிட்டு, ஆப்கான் அரசு படைக்கு எதிராக மூன்று நாட்கள் சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்போவதாக தலீபான் அமைப்பினரும் அறிவித்து உள்ளனர். ஆனால், இந்த சண்டை நிறுத்த காலத்தில், ஆப்கன் அரசு படைகள் தாக்குதல் நடத்தினால், கடுமையான பதிலடி இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்