அமெரிக்க விமான நிலையத்தில் நடிகை மெஹ்ரீனிடம் அதிகாரிகள் விசாரணை

அமெரிக்க விமான நிலையத்தில் நடிகை மெஹ்ரீனிடம் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

Update: 2018-06-18 23:00 GMT
வாஷிங்டன், 

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்தவர் நடிகை மெஹ்ரீன். இவர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் நோட்டா படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க மெஹ்ரீன், கனடா சென்று இருந்தார். அங்கு படப்பிடிப்புக்கு இடையில் அவருக்கு 3 நாட்கள் ஓய்வு கிடைத்தது.

மெஹ்ரீனின் பெற்றோர் அமெரிக்காவில் உள்ளனர். இதனால் அவர்களை பார்க்க மெஹ்ரீன் அமெரிக்கா சென்றார். விமான நிலையத்தில் இறங்கிய அவரை அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அதிரடி விசாரணை நடத்தினர்.

அமெரிக்கா செல்லும் சில நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும், அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் புகார்கள் வந்தன. இதனால் அமெரிக்கா வரும் நடிகைகளை, அதிகாரிகள் விசாரணைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். இது தொடர்பாகவே மெஹ்ரீனிடமும் அதிகாரிகள் சுமார் 30 நிமிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து மெஹ்ரீன் கூறுகையில், அமெரிக்கா சென்ற போது எனக்கு இது பற்றி எந்த விவரமும் தெரியாது. ஒரு சில நடிகைகளின் செயல்களால் ஒட்டு மொத்த நடிகைகளுக்கும் கெட்ட பெயர் உண்டாகி உள்ளது. இதனால் சினிமா துறைக்கு அவமானம் ஏற்பட்டு இருக்கிறது. விசாரணையின் போது அதிகாரிகள் என்னிடம் கேட்ட கேள்விகளால் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தேன் என்றார்.

மேலும் செய்திகள்