இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 384 ஆக உயர்வு

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2018-08-11 08:30 GMT
மட்டாரம்,

இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த ஞாயிற்று கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகியது.  45 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இது மையம் கொண்டிருந்தது. இதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட சிறு சிறு நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

இந்நிலநடுக்கம் சுற்றுலா தலம் ஆக விளங்கும் அருகிலுள்ள பாலி தீவிலும் உணரப்பட்டு உள்ளது.  இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தெருக்களில் சிதறி ஓடினர்.

இந்த நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலியாகி இருந்தனர்.  பின்னர் இந்த எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 13 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர்.

இது இரண்டாவது முறையாக லாம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும்.  இதனால் மட்டாரம் நகரில் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளன.  மின்சாரம் தடைப்பட்டு உள்ளது.   3.87 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

அந்நாட்டு அதிகாரிகள், நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.  பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.
 
இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த 29ந்தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி இருந்தது.  இதில் 17 பேர் பலியாகினர்.  50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்நிலையில் இதே பகுதியில் மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் இடம் பெயர்ந்த 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மருத்துவம், உணவு மற்றும் தூய்மையான குடிநீர் ஆகியவை உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அந்நாட்டில் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அச்சத்துடன் உள்ளனர்.  அவர்கள் சாலைகளில் அல்லது வறண்ட வயல்வெளிகளில் கூடாரங்களில் தங்கி உள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகள், சர்வதேச நிவாரண குழுக்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவை உதவிக்கான பணிகளை தொடங்கி உள்ளது.  ஆனால் மலை பிரதேச பகுதியான வடலாம்போக் பகுதிக்கு செல்வதற்கான சாலைகள் சேதமடைந்த நிலையில் அதற்கான முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த வியாழ கிழமை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மீண்டும் மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியது.  இதனால் முகாம்களில் தங்கி இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு கண்ணீருடன் ஓடினர்.

மேலும் செய்திகள்