வெளியுறவுத் துறை அமைச்சரின் வடகொரிய பயணத்தை ரத்து செய்ய டொனால்டு டிரம்ப் முடிவு

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரின் வடகொரிய பயணத்தை ரத்து செய்யமாறு, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2018-08-25 11:10 GMT
வாஷிங்டன்

அணு ஆயுத சோதனை தொடர்பாக அமெரிக்கா-வடகொரியா கடுமையான வார்த்தை யுத்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, இருநாட்டு ஜனாதிபதிகளான டிரம்ப்-கிம் ஜாங் உன் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில், அணு ஆயுத சோதனைகள் நிறுத்துவது தொடர்பாக வடகொரியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாப்பியோவின் வடகொரிய பயணத்தை ரத்து செய்யுமாறு டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், 

‘வெளியுறவுத் துறை அமைச்சரின் வடகொரிய பயணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில், வடகொரியாவுடன் போதுமான அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை’ என தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கு மறைமுகமாக சீனா உதவுவதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், அமெரிக்கா-வடகொரியா இடையே மீண்டும் மோதல் உருவாக வாய்ப்புள்ளாதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்