மு‌ஷரப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ் மறுப்பு இஸ்லாமாபாத் கோர்ட்டில் இம்ரான்கான் அரசு தகவல்

தேசத்துரோக வழக்கில் மு‌ஷரப்பை கைது செய்ய முடியாது என சர்வதேச போலீஸ் மறுத்துவிட்டது. இந்த தகவலை இஸ்லாமாபாத் கோர்ட்டில் இம்ரான்கான் அரசு தெரிவித்தது.

Update: 2018-08-29 23:30 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் 2001–2008 காலகட்டத்தில் அதிபர் பதவி வகித்தவர், பர்வேஸ் மு‌ஷரப் (வயது 75). இவர் தனது பதவிக்காலத்தில், அங்கு நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். பல நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டார். 100–க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 

இது தொடர்பாக அவர் மீது இஸ்லாமாபாத்தில் உள்ள தனிக்கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

ஆனால் மு‌ஷரப், 2016–ம் ஆண்டு மார்ச் மாதம், சிகிச்சை பெறப்போவதாக கூறி துபாய்க்கு சென்றார். அவர் அங்கிருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. இருப்பினும், அதே ஆண்டின் மே மாதம் தலைமறைவு குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.

அவர் பாதுகாப்பு காரணங்களையொட்டி நாடு திரும்ப முடியாது என பல முறை கூறிவிட்டார். 

இதற்கிடையே தேசத்துரோக வழக்கில் அவரை கைது செய்வதற்கு இன்டர்போல் என்று அழைக்கப்படுகிற சர்வதேச போலீஸ் உதவியை பாகிஸ்தான் அரசு நாடியது. ஆனாலும் மு‌ஷரப் கைது செய்யப்படவில்லை.

கடந்த 20–ந் தேதி மு‌ஷரப் மீதான தேசத்துரோக வழக்கு, இஸ்லாமாபாத் தனிக்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மு‌ஷரப் கைது செய்யப்படாதது ஏன் என்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இம்ரான்கான் அரசின் உள்துறை செயலாளருக்கு சம்மன் அனுப்புமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் மு‌ஷரப் மீதான தேசத்துரோக வழக்கு, இஸ்லாமாபாத் தனிக்கோர்ட்டில் நீதிபதிகள் யவர் அலி, நாசர் அக்பர், தஹிரா சப்தாரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது உள்துறை செயலாளர் நேரில் ஆஜர் ஆனார். அவர், ‘‘மு‌ஷரப்பை கைது செய்து கொண்டு வருவதற்கு சர்வதேச போலீஸ் உதவியை நாடினோம். ஆனால் சர்வதேச போலீஸ் எங்கள் வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டது’’ என்று கூறினார்.

‘‘அரசியல் நோக்கத்துடன் கூடிய வழக்கு என்று கூறி பிடிவாரண்டையும், கடிதத்தையும் சர்வதேச போலீஸ் திருப்பி அனுப்பிவிட்டது’’ எனவும் அவர் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி யவர் அலி, ‘‘மு‌ஷரப்பின் வாக்குமூலத்தை ‘ஸ்கைப்’ (இணையதள வீடியோ வசதி) மூலம் பதிவு செய்யலாமா?’’ என கேள்வி எழுப்பினார். மேலும், ‘‘அவரது வாக்குமூலம் இன்றியே இந்த வழக்கின் விசாரணையை தொடரலாமா?’’ என்றும் வினவினார். 

அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 10–ந் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அப்போது மு‌ஷரப் நேரில் ஆஜர் ஆகாமல் வழக்கு விசாரணையை தொடரலாமா என்பது குறித்து அனைத்து தரப்பினரும் வாதிடுமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும் செய்திகள்