விசாரணையின்போது தவறுதலாக பத்திரிகையாளர் மரணமடைந்ததை ஒப்புக்கொள்ள தயாராகி வரும் சவுதி அரேபியா?

விசாரணையின் போது தவறுதலாக பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மரணமடைந்ததை ஒப்புக்கொள்ள சவுதி அரேபியா தயாராகி வருகிறது என சிஎன்என் ஆதாரங்கள் தெரிவித்து உள்ளது.

Update: 2018-10-16 08:56 GMT
வாஷிங்டன்

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் மாயமான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது தொடர்பாக துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனை, சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்ஆசிஸ் அல் சவுத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இரு நாடுகள் சார்பில் கூட்டுவிசாரணை குழுவை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ரியாத்  சென்று உள்ளார். அவர்  சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மானை  சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது  பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மரணம் குறித்து பேசப்படும் என கூறப்படுகிறது. கசோக்கி  குடும்பம் இது குறித்து  ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து உள்ளது. 

இந்த நிலையில் சவூதி அரேபியா விசாரணையின் போது தவறுதலாக  பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மரணமடைந்ததை ஒப்புக் கொள்ள தயாராகி வருகிறது என சிஎன்என் ஆதாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்