கொல்லப்பட்ட சவுதி அரேபிய பத்திரிகையாளர் ‘ஜமால் கசோக்கியின் உடலை ஒப்படைக்க வேண்டும்’ - மகன்கள் கோரிக்கை

கொல்லப்பட்ட சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் உடலை ஒப்படைக்க வேண்டும் என மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-11-05 23:00 GMT
டெஹ்ரான்,

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), கடந்த மாதம் 2-ந் தேதி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்றிருந்தபோது, அங்கு வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதை அந்த நாடு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்த நிலையில் ஜமால் கசோக்கியின் உடலை ஒப்படைக்க வேண்டும் என அவரது மகன்களான சலா, அப்துல்லா ஆகியோர் கோரிக்கை விடுத்து உள்ளனர். தந்தையின் சாவுக்கு பிறகு முதல் முறையாக சி.என்.என். தொலைக்காட்சிக்கு அவர்கள் அளித்த பேட்டியில் கூறும்போது, ‘அவருக்கு (கசோக்கி) நடந்தது அனைத்தும் வலியை கொடுத்திருக்காது அல்லது வேகமாக நடந்திருக்காது என்றே நம்புகிறோம். அவர் ஒரு அமைதியான மரணத்தை தழுவியிருப்பார் எனவும் நம்புகிறோம்’ என்று தெரிவித்தனர்.

அவரது உடலை சவுதி அரேபியாவின் மதினாவில் உள்ள அல்-பாகி மயானத்தில் அடக்கம் செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும் என்பதே தங்களின் தற்போதைய விருப்பம் என்று கூறிய அவர்கள், இது தொடர்பாக சவுதி அதிகாரிகளிடம் பேசியிருப்பதாகவும், அது விரைவில் நடக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட கசோக்கியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு 5 பெட்டிகளில் வைத்து, தூதரகத்து அருகே உள்ள சவுதி தூதரக அதிகாரியின் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டதாக துருக்கி செய்தித்தாள்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்