சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு - 20 பேர் கொன்று குவிப்பு

சோமாலியாவில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

Update: 2018-11-10 23:00 GMT
மொகாதிசு,

சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய அல் சபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த நாட்டின் பல இடங்களை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர்.

அங்கு தலைநகர் மொகாதிசுவில் உள்ள சஹாபி நட்சத்திர ஓட்டலில் அரசு அதிகாரிகள், வெளிநாட்டினர் அடிக்கடி வந்து தங்குகின்றனர். இந்த ஓட்டல் ராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த ஓட்டல் பகுதியில் அடுத்தடுத்து 3 கார் குண்டு வெடிப்புகள் நடந்தன. அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது.

இதில் 20 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பயங்கரவாதிகள் ஓட்டலுக்குள் நுழைய முடியாத நிலையில், அதன்வெளிப்புறத்தில் இந்த குண்டுவெடிப்புகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

குண்டுவெடிப்பில் பலியான சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போய் விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அல்சபாப் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். அரசு அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை நடத்தியதாக அவர்கள் கூறி உள்ளனர்.


மேலும் செய்திகள்