தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோக்கி கொலை, உடல்கள் பிரிப்பு; சவுதி ஒப்புதல்

சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோக்கி கொலை செய்யப்பட்டு உடல்கள் பிரிக்கப்பட்டன என சவுதி அரேபியா முதன்முறையாக ஒத்து கொண்டுள்ளது.

Update: 2018-11-15 12:48 GMT
ரியாத்,

எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோக்கி.  59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்.  அவர் தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின் மன்னராட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார்.

சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபரில் சென்ற அவர் மாயமானார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

இது ஒரு சர்வதேச கண்டனத்தை ஏற்படுத்தியதுடன் மேற்கு நாடுகளுடனான உறவுகளுக்கு சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி அளித்தது.  பின்னர் சவுதி அரேபியா அதனை ஒத்து கொண்டது.

இந்த நிலையில், சவூதி அரேபிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ள தகவலில், சவூதி அரேபிய தூதரகத்தில் கசோக்கிக்கு மதுபானம் கொடுக்கப்பட்டு பின்னர் அவரது உடல் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.  அதன்பின்பு கசோக்கியின் உடல் பாகங்கள் தூதரகத்திற்கு வெளியே இருந்த ஒரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன என கூறப்பட்டு உள்ளது.

இதனால் கசோக்கி தூதரகத்திற்குள் கொலை செய்யப்பட்ட முறையானது முதன்முறையாக சவூதி அரசால் ஒத்து கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளான 5 சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்