மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறினார்.

Update: 2018-11-29 23:15 GMT
இஸ்லாமாபாத், 

ஒரே சமயத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறுவதும், இந்தியா-பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதும் சாத்தியமாகாது. பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தருவதையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதையும் நிறுத்த வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிராக நிலையான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலையாக உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் இதுபற்றி இந்திய பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு இம்ரான்கான் கூறும்போது, “நாட்டுக்கு வெளியே நடைபெறும் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் எல்லையை பயன்படுத்த அனுமதிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. பாகிஸ்தான் மக்களின் மனநிலை மாறிவிட்டது. பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுடன் அமைதியாக இருக்கவே விரும்புகிறார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்பு கிடைத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்றார்.

காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியுமா? என்று கேட்டதற்கு, “முடியாதது எதுவும் இல்லை. எந்த பிரச்சினை குறித்தும் பேசுவதற்கு நான் தயார். காஷ்மீர் பிரச்சினைக்கு ராணுவம் மூலம் தீர்வுகாண முடியாது. அமைதிக்கான நடவடிக்கை ஒரு பக்கம் மட்டும் இருக்கக்கூடாது. இந்தியாவில் பொதுத்தேர்தல் முடிவடையும் வரை இந்த நடவடிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.

மும்பை தாக்குதல் முக்கியபுள்ளி ஹபீஸ் சயீது மீதான தண்டனை பற்றி கேட்டதற்கு, “ஏற்கனவே ஐ.நா. ஹபீஸ் சயீது மீது சில தடைகள் விதித்துள்ளது. அவர் மீது ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று இம்ரான்கான் கூறினார்.

மேலும் செய்திகள்