பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் சிறையில் அடைப்பு

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2018-12-06 23:00 GMT
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் (வயது 67), ஊழல் வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 15–ந் தேதி கைது செய்யப்பட்டார். 

அவர் அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதல்–மந்திரி பதவியை வகித்த போது ஆஷியானா வீட்டு வசதி ஊழலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் (தேசிய பொறுப்புடைமை முகமை) குற்றம் சாட்டுகிறது.

இந்த வழக்கில் அவர் தொடர்ந்து போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார். இந்தக் காவல் முடிந்த நிலையில் நேற்று அவர் லாகூர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் வக்கீல் வாரிஸ் அலி ஜான்ஜூவா வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதை நீதிபதி சையத் நஜ்முல் ஹசன் நிராகரித்தார். ஷாபாஸ் ஷெரீப்பை வரும் 13–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் காட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக அவரது கைது நடவடிக்கைக்கு எதிராக அவரது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்