சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் துருக்கி ஆதரவு படையினர் 120 பேர் பலி

சிரியாவில் கடந்த 5 நாட்களில் அல் கொய்தா தீவிரவாத கிளை அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி படையினர் 120 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2019-01-06 01:22 GMT
டமாஸ்கஸ்,

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது.  இந்த போரால் குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

அரசுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகளும் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை ஒழிக்க சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படையினரும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்களுடன் துருக்கி படைகளும் அரசு ஆதரவு போரில் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஹயத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற அமைப்பும், துருக்கி ஆதரவு பெற்ற அல் ஜென்கி என்ற கிளர்ச்சி படையினரும் கடும் மோதலில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த சண்டையில் கடந்த 5 நாட்களில் கிளர்ச்சி படையை சேர்ந்த 120 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனை அடுத்து அல் ஷாம் தீவிரவாத அமைப்பினர் அலெப்போ நகரில் உள்ள 23 கிராமங்கள் மற்றும் நகரங்களை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீவிரவாத அமைப்பினர் பிற கிளர்ச்சி குழுக்களையும் வீழ்த்தி வருகின்றனர்.  அவர்களை துருக்கி படைகளோ அல்லது சிரிய அரசு படைகளாலோ கூட தடுத்து நிறுத்த முடியவில்லை என லண்டனை அடிப்படையாக கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பக அமைப்பு தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்