சிங்கப்பூரில் கடமை தவறிய இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 5 மாத சிறை

சிங்கப்பூரில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போலியான ஆவணங்களை தயாரித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் போலீசுக்கு 5 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2019-01-08 13:03 GMT
சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச்சில் பெண் ஒருவர் போலீசில் பாலியல் துன்புறுத்தல் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.  அதில், குற்றச்சாட்டு கூறப்பட்ட நபர் தன்னை கற்பழிக்க முயன்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை இந்திய வம்சாவளியை சேர்ந்த கலைவாணி காளிமுத்து (வயது 38) என்ற பெண் காவலர் விசாரணை மேற்கொண்டார்.  இதில், புகார் தெரிவித்த பெண்ணை நேர்காணல் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், அவரை சந்திக்க முடியாத நிலையில் வழக்கை உடனடியாக முடிப்பதற்காக போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார்.

இதில், அந்த சம்பவத்தின்பொழுது, குற்றச்சாட்டு கூறப்பட்ட நபரை இந்த பெண் தொட்டுள்ளார்.  தன்னை அந்த நபர் தொட்டபொழுது எதுவும் கவனியாமல் இருந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.  பெண்ணின் பழைய புகாரில் இருந்த கையெழுத்தினை வைத்து அவரது பெயரை இந்த தகவலில் சேர்த்து உயரதிகாரிக்கு அனுப்பி விட்டார்.

இதனுடன், பெண்ணின் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பரிந்துரைத்தும் உள்ளார்.

இதுபற்றிய மற்றொரு அதிகாரியின் விசாரணையில் பெண் போலீசின் மோசடி வேலைகள் தெரிந்தன.  இதனை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  அவர் கடமையில் இருந்து தவறியதற்காக, நீதிமன்றம் 5 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து உள்ளது.

மேலும் செய்திகள்