அரசு அலுவலகங்கள் மூடல் எதிரொலி :அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் வெளிநாட்டு பயணம் ரத்து - டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்டும் விவகாரத்தில் அந்த நாட்டின் நாடாளுமன்றம் 5.7 பில்லியன் டாலர் நிதி (சுமார் ரூ.40,470 கோடி) அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் கோரி வருகிறார். இதை எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி நிராகரித்து விட்டது.

Update: 2019-01-18 23:15 GMT

வாஷிங்டன், 

செனட் சபையில் செலவின மசோதாவை நிறைவேற விடாமல் முட்டுக்கட்டையும் போட்டுள்ளது. இதனால் அங்கு நிதி ஒதுக்கீடு இன்றி அரசு துறைகள் பல முடங்கி விட்டன. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. 

சுமார் 8 லட்சம் ஊழியர்களும், அதிகாரிகளும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆப்கானிஸ்தான் மற்றும் பிரசல்ஸ் சென்று அங்குள்ள ராணுவ அதிகாரிகளை சந்திக்க இருந்தார்.

அவர் நேற்று முன்தினம் விமானத்தில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, அவரது இந்த அரசு முறை பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்து விட்டார். அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சமரச பேச்சு வார்த்தைக்கு அவர் தேவை என ஜனாதிபதி டிரம்ப் கூறி உள்ளார்.

இதேபோன்று சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோஸ் நகரில் நடக்கிற வருடாந்திர உலக பொருளாதார பேரவை கூட்டத்துக்கு செல்லவிருந்த அமெரிக்க தூதுக்குழுவின் பயணத்தையும் ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக ரத்து செய்து விட்டார். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்