உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது இந்தியா

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பட்டியலில் இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5-வது இடத்தை பிடித்து உள்ளது.

Update: 2019-01-21 10:48 GMT
லண்டன்:

சர்வதேச நிறுவனமான ‘பி.டபிள்யூ.சி.’ உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது. உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் இந்தியா 2019 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார தரவரிசையில் இங்கிலாந்தை விட  முன்னணியில் உள்ளது.

தரவரிசை பட்டியலில் நடப்பு 2019-ம் ஆண்டில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 7-வது இடத்தில் இருந்த இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதன்மூலம் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸ் 6-வது இடத்தை பெற்றுள்ளது.

இந்த உலகளாவிய பொருளாதார கண்காணிப்பு அறிக்கையானது  உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு  இங்கிலாந்தில் உள்நாட்டு உற்பத்தி  வளர்ச்சி 1.6 சதவிகிதமாகவும், பிரான்ஸ் 1.7 சதவீதமும், 2019-ல் இந்தியாவில் 7.6 சதவிகிததமாகவும் உள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். அதனால் மக்களின் உழைப்பு காரணமாக உற்பத்தி திறன் அதிகரித்து பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக பி.டபிள்யூ.சி. தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி நிரந்தரமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்தும், பிரான்சும் முறையே 5 மற்றும் 6-வது இடத்தில் இருந்தன. தற்போது ‘பிரக்ஸிட்’ பிரச்சினையில் இங்கிலாந்து உள்ளது. இதனால் பவுண்டு மற்றும் யூரோ நாணயங்களுக்கு இடையேயான மதிப்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

2 நாடுகளுமே சமமான மக்கள் தொகையை கொண்டது. இருந்தாலும் நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக இங்கிலாந்தை 7-வது இடத்துக்கு தள்ளிவிட்டு 6-வது இடத்திலேயே பிரான்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது.

பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றத்துடன் அமெரிக்கா பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2-வது இடத்திலும், ஜப்பான், ஜெர்மனி முறையே 3 மற்றும் 4-வது இடங்களிலும் உள்ளன.

மேலும் செய்திகள்