இலங்கையில் மேலும் 49 இந்தியர்கள் கைது

இலங்கையில் மேலும் 49 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-02-02 20:22 GMT
கொழும்பு,

இலங்கையில் விசா விதிமுறைகளை மீறி, குறிப்பாக விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருக்கும் இந்தியர்கள் மீது அந்த நாட்டு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் இங்கிரியா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 24 பேரை கடந்த மாதம் இலங்கை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக தலைநகர் கொழும்பு அருகே உள்ள மதுகமாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இந்திய தொழிலாளர்கள் 49 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். விசா காலம் முடிவடைந்த பின்னும் தங்கியிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மிரிகனாவில் உள்ள குடியேற்றத்துறை தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிரான வழக்கமான நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்ததும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

விசா காலம் முடிவடைந்தும் தங்கியிருந்த 73 இந்தியர்கள் ஒரு மாத காலத்துக்குள் கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கைவாழ் இந்தியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்