ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 4 பேர் சாவு

ரஷிய தலைநகர் மாஸ்கோவின் மத்திய பகுதியில் உள்ள நிக்கிட்ஸ்கை பவுல்வர்டு என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 10–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

Update: 2019-02-04 22:30 GMT

மாஸ்கோ,

அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.

இதையடுத்து வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். எனினும் தீ நாலாபுறமும் சூழ்ந்துகொண்டதால் பலர் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதற்கிடையில், தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் ராட்சத ஏணிகள் மூலம் மேல் தளத்தில் உள்ள வீடுகளுக்குள் சிக்கி இருந்த 8 சிறுவர்கள் உள்பட 43 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்களில் 4 பேர் லேசான தீக்காயம் அடைந்திருந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்