ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தை கைப்பற்றியது பாகிஸ்தான் அரசு

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-02-22 17:10 GMT
இஸ்லாமாபாத்,

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் துணை ராணுவ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் இறந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது.

இத்தகைய சூழலில், பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தில், பயங்கரவாத அமைப்புக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு, ஜமாத்-உத்-தவா அமைப்பின் தொண்டு பிரிவு நிறுவனமான ஃபலாஹ்-இ-இன்சானியாத் என்ற அமைப்பிற்கும் இந்தக் கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டது.

பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹவல்பூர் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு இன்று கைப்பற்றியது. அந்தஅலுவலகத்தை நிர்வகிக்க அரசு சார்பில் ஒருவரை நியமித்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்