நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை - இம்ரான்கான்

நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.

Update: 2019-03-04 07:02 GMT
கராச்சி, 

சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்தது.

அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று இம்ரான்கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கு இம்ரான்கானுக்கு  பாராட்டுக்கள் குவிந்தது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலக நாடுகளில் இருந்து இம்ரான்கானின் நடவடிக்கையை மக்கள் டுவிட்டரில் பாராட்டினர்.

இந்நிலையில் இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் இதுதொடர்பான கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. டுவிட்டரில் #NobelPeacePrizeForImranKhan, #PakistanLeadsWithPeace மற்றும் #ThankYouImranKhan ஆகிய ஹேஷ்டேகுகள் இம்ரான்கான் நடவடிக்கையை பாராட்டி, அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ”நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களது விருப்பப்படி அமைதி மற்றும் துணை கண்டத்தில் வளர்ச்சி யார் ஏற்படுத்துகிறாரோ அவரே நோபல் பரிசு பெற தகுதி பெற்றவர்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்