ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் எங்கள் நாட்டில் இல்லை; பாகிஸ்தான் ராணுவம்

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் எங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Update: 2019-03-06 13:03 GMT
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் பலியாகினர்.  இந்த சம்பவத்திற்கு அந்த இயக்கம் பொறுப்பேற்று கொண்டது.

இதனை தொடர்ந்து கடந்த 26ந்தேதி, பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது.  இதில் தீவிரவாதிகள், தீவிரவாத பயிற்சி பெறுவோர், தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலில் 250 தீவிரவாதிகள் பலியாகி உள்ளனர் என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

தீவிரவாத தாக்குதலுக்கு பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் ஏற்படும் சூழ்நிலை பற்றிய கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்த பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தின் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஜெனரல் ஆசிப் கபூர், எப்பொழுது அவர்கள் வான்வழியே அத்துமீறி தாக்குதல் நடத்தினார்களோ, நாங்களும் பதிலடி கொடுத்தோம்.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பல தசாப்தங்களாக படை வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.  ஆனால் இந்திய விமான படையின் அத்துமீறல் மற்றும் எங்களது பதிலடிக்கு பின்னர் இரு தரப்பிலும் பாதுகாப்பு முறைகள் கையாளப்பட்டு உள்ளன.  படைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு உள்ளது என கூறினார்.

காஷ்மீரின் புல்வாமா நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்று கொண்டது.  ஆனால் பாகிஸ்தானுக்குள் இருந்து அந்த இயக்கம் இதனை கூறவில்லை என கூறிய கபூர், பாகிஸ்தானில் இந்த இயக்கம் இல்லை.  

ஐ.நா. அமைப்பு மற்றும் பாகிஸ்தானால் கூட இந்த இயக்கம் தடை செய்யப்பட்டு உள்ளது.  யாருடைய நெருக்கடியினாலும் நாங்கள் எதனையும் செய்யவில்லை என்றும் கூறினார்.

கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் எங்களது நாட்டில் இருக்கிறார்.  இந்தியா தக்க சான்றினை வழங்கினால் மட்டுமே, அரசு அசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.

மேலும் செய்திகள்