மோசடி வழக்கில் டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு 47 மாதம் சிறை

மோசடி வழக்கில் டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு 47 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-03-08 23:00 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முன்னாள் பிரசார குழு மேலாளர் பால் மானபோர்ட் (வயது 69).

2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறவும், ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற புகார் எழுந்தது. இதையொட்டி ராபர்ட் முல்லர் குழு சிறப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை வளையத்தில் பால் மானபோர்ட்டும் சிக்கி உள்ளார்.

மேலும் இவர் உக்ரைனில் பிரசாரகராக செயல்பட்டு, அதன் மூலம் பெருமளவு பணம் கிடைத்தும், அந்த வருமானத்தை மறைத்து தவறான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததாகவும், வெளிநாட்டு வங்கி கணக்கு குறித்து குறிப்பிடாமல் மறைத்ததாகவும், வங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக பால் மானபோர்ட் மீது அலெக்சாண்டிரியா நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்தது. விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் அவரது தண்டனை விவரம் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 47 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை குறித்து அவர் மிகுந்த வேதனை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்