ஐரோப்பிய கூட்டமைப்பில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க நடவடிக்கை : ஜெர்மனி அதிரடி

ஐரோப்பிய கூட்டமைப்பில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஜெர்மனி நடவடிக்கை எடுத்து வருகிறது.

Update: 2019-03-20 23:30 GMT

பெர்லின், 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14–ந் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர்.

உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

அதனை தொடர்ந்து இந்த இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா வலியுறுத்தியது.

அதன்படி இந்தியாவுக்கு ஆதரவாக, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன.

ஆனால் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது மறுப்பு ஓட்டுரிமை அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டைபோட்டது. சீனா இப்படி முட்டுக்கட்டை போடுவது இது முதல் முறை அல்ல.

இதற்கு முன் 2009, 2016 மற்றும் 2017–ம் ஆண்டுகளிலும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வலியுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 3 முறையும் சீனா, இந்த தீர்மானத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

எனினும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் பக்கபலமாக உள்ளன.

இந்தநிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஜெர்மனி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பில் பரிந்துரை ஒன்றை முன்வைத்துள்ள ஜெர்மனி, ஐரோப்பிய கூட்டமைப்பின் பிற உறுப்பு நாடுகளிடம் இதுபற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 28 நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டுமென ஜெர்மனி வலியுறுத்தி உள்ளது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பில் இதுவரை எந்த வித தீர்மானமும் கொண்டுவரப்படவில்லை.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் ஐரோப்பிய கூட்டமைப்பில் நிறைவேற்றப்பட்டால், அந்த 28 நாடுகளில் மசூத் அசார் பயணம் செய்ய தடைவிதிக்கப்படும். மேலும் அந்த நாடுகளில் அவரது பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்