நியூசிலாந்தில் துப்பாக்கிகள் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை

நியூசிலாந்தில் துப்பாக்கிகள் விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2019-03-21 04:54 GMT
வெலிங்டன்,

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என்பதை அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்தன் உறுதி செய்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த கொடூர காட்சிகளை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவன் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்த நீதிபதி, அவனை அடுத்த மாதம் 5–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் பகுதியளவு தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, துப்பாக்கி வாங்குவது மற்றும் வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், நியூசிலாந்தில் துப்பாக்கி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். ராணுவ பாணியிலான பாதியளவு தானியங்கி துப்பாக்கி மற்றும் அசால்ட் ரைஃபிள்கள் விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், துப்பாக்கிகள் சுடும் வேகத்தை அதிகரிக்க உதவும் துப்பாக்கி மேகசின்கள் மற்றும் பம்ப் ஸ்டாக்கை ஒத்த கருவிகள் ஆகியவற்றுக்கும் உடனடியாக தடை விதிக்கப்படும் எனவும் நியூசிலாந்து பிரதமர்  தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்