இங்கிலாந்தில் திப்பு சுல்தானின் துப்பாக்கி ரூ.55¼ லட்சத்துக்கு ஏலம்

இங்கிலாந்தில் திப்பு சுல்தானின் துப்பாக்கி ரூ.55¼ லட்சத்துக்கு ஏலம் போனது.

Update: 2019-03-27 23:30 GMT
லண்டன்,

இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் அவர் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி பதித்த வாள், அரிய வகை துப்பாக்கி மற்றும் சில போர் வாள்கள் அடங்கிய 8 அரிய பொருட்களை மேஜர் தாமஸ் ஹார்ட் என்பவர் இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றார்.

இந்த கலைப்பொருட்கள் அனைத்தும் பல்வேறு தலைமுறையினரை கடந்து, 220 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் பெர்க்சைர் நகரை சேர்ந்த ஒரு தம்பதியின் கையில் சமீபத்தில் கிடைத்தது.

அந்த தம்பதி தங்களது பழமையான வீட்டின் பரணைச் சுத்தம் செய்தபோது, திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கவசத்தாலான வாள், துப்பாக்கி உள்ளிட்ட 8 பொருட்களை கண்டெடுத்தனர்.

அதனை தொடர்ந்து அந்த தம்பதி துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை ‘ஆண்டனி கிரிப் ஆர்ம்ஸ்-ஆர்மர்’ எனப்படும் தனியார் ஏல நிறுவனத்திடம் அவற்றை கொடுத்தனர்.

இதையடுத்து திப்பு சுல்தான் பயன்படுத்திய 8 பொருட்களும் மார்ச் 26-ந் தேதி ஏலத்தில் விடப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது.

திருடப்பட்ட கலைப்பொருட்களை கண்டுபிடித்து மீட்டெடுக்க உதவும் தன்னார்வ அமைப்பான ‘இந்தியா பிரைட் புராஜக்ட்’ என்ற அமைப்பு இதுபற்றி இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரியப்படுத்தியது.

அதனை தொடர்ந்து, ஏலத்தை நிறுத்திவைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனாலும் திட்டமிட்டபடி அந்நிறுவனம் ஏலத்தை நடத்தியது. இதில் திப்பு சுல்தான் பயன்படுத்திய வெள்ளி பொருத்தப்பட்ட அரிய வகை துப்பாக்கி 60 ஆயிரம் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.55 லட்சத்து 20 ஆயிரம்) ஏலம் போனது.

அதேபோல் திப்பு சுல்தானின் தங்கக் கைப்பிடி பதித்த வாள் மற்றும் வாளை பொருத்தி வைக்கும் உறையுடன் கூடிய பெல்ட் ஆகியவை 18 ஆயிரத்து 500 பவுண்டுக்கு (ரூ.17 லட்சத்து 2 ஆயிரம்) ஏலத்தில் எடுக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக திப்பு சுல்தானின் 8 அரிய பொருட்கள் 1 லட்சத்து 7 ஆயிரம் பவுண்டுக்கு (ரூ.98 லட்சத்து 40 ஆயிரம்) ஏலம் போனது.

மேலும் செய்திகள்