ஈராக்கில் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 2 பேர் பலி - ஒரு ஐ.எஸ். பயங்கரவாதியும் உயிரிழப்பு

ஈராக்கில் நடந்த தாக்குதலில், ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்ததுடன், பாதுகாப்பு படையினர் 2 பேர் பலியாயினர்.

Update: 2019-03-31 22:15 GMT
பாக்தாத்,

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சலாகுதீன் மாகாணத்தின் யாத்ரிப் பகுதியில் மத்திய போலீஸ், துணை ராணுவ வீரர்கள் அடங்கிய கூட்டு பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். இதில் ஒரு போலீஸ் அதிகாரியும், ஒரு துணை ராணுவ வீரரும் பலியாகினர். இதை சலாகுதீன் மாகாண போலீஸ் உயர் அதிகாரி கர்னல் முகமது அல் பாஜி உறுதி செய்தார்.

இதற்கு மத்தியில், ஈராக்கின் மேற்கு மாகாணமான அன்பாரில் அல் ஹரெய்ஜியா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது போலீஸ் கமாண்டோ படையினர் மற்றும் படைவீரர்கள் கூட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் திருப்பித்தாக்கினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு ஐ.எஸ். பயங்கரவாதி பலி ஆனார். இந்த மோதலின்போது ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவர் காயம் அடைந்த நிலையில் பிடிபட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்