யார் பயங்கரவாதி? அமெரிக்கா-ஈரான் வரலாறு காணாத மோதல்

அமெரிக்கா-ஈரான் இடையே வரலாறு காணாத மோதல் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத பரவலால் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த ஈரானுடன் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய 6 நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை செயல்படுத்தின.

Update: 2019-04-10 00:00 GMT

தெஹரான், 

 ஒப்பந்தத்தின்படி, ஈரான் தன்னுடைய அணு ஆயுத ஆய்வைக் கைவிடுவதற்குப் பதிலீடாக அந்நாட்டின் மீது மேற்கூறிய சர்வதேச நாடுகள் விதித்திருந்த பொருளாதார தடைகள் தளர்த்தப்பட்டன.

அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை தற்போதைய ஜனாதிபதி கடுமையாக விமர்சித்து வந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இதனால் இருநாட்டு உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. ஈரான் மீது டிரம்பின் நிர்வாகம் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து.

அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என உலக நாடுகளை அமெரிக்கா எச்சரித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது.

இந்த நிலையில், ஈரானின் ராணுவமான புரட்சிகர பாதுகாப்புபடை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், “ஈரான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. அதன் புரட்சிகர பாதுகாப்புப் படை பயங்கரவாத செயல்பாடுகளில் பங்கேற்பதுடன் அதற்கு நிதியுதவி அளிக்கிறது. பயங்கரவாதத்தை ஈரான் அரசு தனது செயல்பாட்டு கருவியாக ஊக்குவிப்பதை அமெரிக்கா உறுதி செய்கிறது” என்றார்.

மேலும் அவர், “நீங்கள் ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையோடு தொழில் செய்கிறீர்கள் எனில் அது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்வதற்கு சமம்” என தெரிவித்தார்.

ஈரானின் பாதுகாப்புப் படையை பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததன் மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் அதிகபட்ச பொருளாதார தடைகளை விதிக்க முடியும். இதன் காரணமாக ஈரானின் தொழில்துறை பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஈரானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் அறிவித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இருநாடுகளும் ஒன்றை ஒன்று கடுமையாக சாடி கொள்வதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் ஈரான் அதிபர் ஹாசன் ருஹானி இந்த விவகாரம் தொடர்பாக நேற்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் அமெரிக்காவை உலக பயங்கரவாதத்தின் தலைவன் என கூறி கடுமையாக சாடினார்.

இதுபற்றி அவர் பேசுகையில், “ஈரான் ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததன் மூலம் அமெரிக்கா மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டது. ஆனால் இந்த தவறு ஈரானியர்களை ஒன்றிணைக்கும், ஈரான் புரட்சிகர பாதுகாப்புபடை வீரர்கள் மேலும் பிரபலமடைவார்கள். ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தனது ராணுவத்தின் பயங்கரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது” என்றார்.

இதற்கிடையில், ஈரான் ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்ததை கண்டிக்கும் வகையில், ஈரான் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் அனைவரும் பாதுகாப்புபடை வீரர்களின் சீருடையை அணிந்து அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 

மேலும் செய்திகள்