இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 4 இந்தியர்கள் சாவு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள்.

Update: 2019-04-21 23:30 GMT
கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்பு, நிகாம்போ, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் நேற்று தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.

இந்த சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அவர்களில் 35 பேர் வெளிநாட்டினர் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, பலியான வெளிநாட்டினரில் 4 பேர் இந்தியர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.

கொழும்பு குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் உடல்கள், கொழும்பில் உள்ள தேசிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த ஆஸ்பத்திரியில் இருந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

பலியான இந்தியர்களின் பெயர்கள் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ், ரஜினா (வயது 58) ஆகும். இவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 இந்தியர்கள் பலியான செய்தியை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் உறுதி செய்துள்ளார்.

குண்டு வெடிப்பில் பலியான ரஜினா கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர். அவரை பற்றிய விவரம் பின்வருமாறு:-

மங்களூரு பைக்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் குக்காடி. இவருடைய மனைவி ரஜினா (58). இவர்கள் மும்பையில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அப்துல் காதரும், ரஜினாவும் உறவினரை பார்ப்பதற்காக இலங்கைக்கு சென்றனர். ரஜினாவை இலங்கையில் விட்டுவிட்டு அப்துல் காதர், துபாய்க்கு சென்றுவிட்டாா். இதனால் ரஜினா, கொழும்பு நகரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது தான், அவர் தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் சிக்கி ரஜினா உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்