லெபனானில் இருந்து சொந்த நாட்டிற்கு 2 லட்சம் சிரிய அகதிகள் திரும்பியுள்ளனர்; அறிக்கை தகவல்
சிரியாவை சேர்ந்த 2 லட்சம் அகதிகள் லெபனானில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. #Syrianrefugees;
பெய்ரூட்,
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், அரசுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிரிய அரசு ராணுவத்தின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. அரசுக்கு எதிரான உள்நாட்டு போரில், குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களில் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பலர் அங்கிருந்து தப்பி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பி சென்றுள்ளனர்.
இதுபற்றி லெபனான் அரசு, தங்கள் நாட்டில் 15 லட்சம் சிரிய அகதிகள் உள்ளனர் என கூறியுள்ளது. லெபனான் நாட்டின் பொது பாதுகாப்பு அமைப்பு ஆனது சிரிய நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து சிரிய அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இதன்படி 2 லட்சம் அகதிகள் சிரியா நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இதில், கடந்த 2018ம் ஆண்டு சொந்த நாடு திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை உயர்ந்திருந்தது. ஆனால் சமீபத்தில் புனித ரமலான் மாதம் தொடங்கிய நிலையில் இந்த எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது.
இதுவரை லெபனான் நாட்டில் அகதிகளுக்கான ஐ.நா. தூதரக அலுவலகத்தில் 10 லட்சம் சிரியா நாட்டு பொதுமக்கள் தங்களை அகதிகளாக பதிவு செய்துள்ளனர். சிரியாவின் 8 லட்சத்து 90 ஆயிரம் அகதிகளை சொந்த நாட்டிற்கு திரும்ப செய்வதற்கான வரைவு திட்டம் ஒன்றை வகுத்து ரஷ்ய அரசு, லெபனான் நாட்டிடம் அளித்து உள்ளது.