பீகாரில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ‘விவிபாட்’ எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அறைகளின் வளாகங்களில் தலா ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட உயர் அதிகாரிகள் பணியில் உள்ளனர். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், சட்டசபை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் பாதுகாப்பு அறைகளுக்கு அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
38 மாவட்டங்களில் மொத்தம் 46 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஈரடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்அடுக்கில், ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினரும், வெளிஅடுக்கில் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 9 மணியில் இருந்து முன்னிலை நிலவரம் தெரிய வரும். மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எல்லாம் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். எனவே, பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.