கர்நாடகா: சிறுத்தை தாக்கி பெண் படுகாயம் - வனப்பகுதியில் பஸ்சில் சென்றபோது விபரீதம்

பஸ்சில் ஜன்னல் கண்ணாடி ஒன்று சற்று திறந்திருந்தது.;

Update:2025-11-14 00:56 IST

பெங்களூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பன்னர்கட்டா தேசிய பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் வசதிக்காக வனத்துறை சார்பில் பஸ்சில் சபாரி பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பூங்காவில் நேற்று வனத்துறை சார்பில் சபாரி பஸ்சில் 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் சுற்றுலா சென்றனர். அப்போது, மதியம் 1 மணியளவில் அடர்ந்த வனப்பகுதியில் பஸ் சென்றபோது அங்கு சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. அதை பஸ்சில் இருந்த சுற்றுலா பயணிகள் கண்டு களித்ததுடன் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர்.

அப்போது, பஸ்சில் ஜன்னல் கண்ணாடி ஒன்று சற்று திறந்திருந்தது. அந்த ஜன்னல் கண்ணாடி வழியாக சிறுத்தை பஸ்சுக்குள் நுழைய முயன்றது. அப்போது, ஜன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த 56 வயதான வஹிதா பானு என்ற பெண்ணை சிறுத்தை தாக்கியது. சிறுத்தையின் நகங்கள் கீறியதில் அப்பெண்ணின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், பஸ்சில் இருந்த சக சுற்றுலா பயணிகள் அலறினர். இதையடுத்து, உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் சுற்றுலா சென்றபோது ஜன்னல் கண்ணாடியை சிறிது திறந்து வைத்ததே சிறுத்தை தாக்க காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்