சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்: ‘அரபு நாடுகளின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை’ - ஈரான் திட்டவட்டம்

சரக்கு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, அரபு நாடுகளின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஈரான் தெரிவித்துள்ளது.

Update: 2019-06-01 00:01 GMT
டெஹ்ரான்,

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகியது முதல், இருநாடுகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. ஈரானை எச்சரிக்கும் வகையில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை குவித்து இருக்கிறது.

இதற்கிடையில், ஓமன் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள புஜைரா துறைமுகத்தில் சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட நாசவேலை தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், நேற்று முன் தினம் சவுதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவில் அரபு நாடுகளின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்ஆயிஸ் அல்சவுத், “சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்த பிராந்தியத்தில் ஈரான் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தீர்வுகாண ஈரான் மீது தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன் ஈரானை முறியடிக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்” என கூறினார்.

ஆனால், அரபு நாடுகளின் கூட்டமைப்பு தங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாக கூறி அதனை ஈரான் நிராகரித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் மவுசாசி கூறும்போது, “அரபு நாடுகள் கூட்டமைப்பில் சில அரபு தேசங்கள் வைத்த குற்றசாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இவை சவுதியின் முயற்சியால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் ஒரு பகுதி” என்றார்.

மேலும் செய்திகள்