"ஹூவாய் தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது"

ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2019-06-25 05:40 GMT
ஈரான் மீதான பொருளாதார தடையை மீறியதாக சீனத் தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் கனடாவின் வான்கூவர் நகரில் வைத்து ஹூவாயின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸூ கைது செய்யப்பட்டார். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் நடைமுறையை கனடா தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாடு கடத்தும் நடைமுறையை கைவிடுமாறு மெங் வான்ஸூவின் வழக்கறிஞர்கள், கனடாவின் நீதித்துறை அமைச்சர் டேவிட் லேமெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

அந்தக் கடிதத்தில், மெங் வான்ஸூவை நாடு கடத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைப்பது கனடாவின் நலன்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள கனடா நீதித்துறையானது, கடிதம் தொடர்பாக எதையும் குறிப்பிடாமல், சட்ட விதிகளை மதித்தே தாங்கள் செயல்படுவதாக கூறியுள்ளது.

மேலும் செய்திகள்