ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது தாக்குதல்; பாகிஸ்தான் கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் தலீபான் படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Update: 2019-07-01 13:26 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டில் 18 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் ஈடுபட்டு வருகின்றன.  எனினும் இதில் முன்னேற்றத்திற்கான பலன் இல்லை.

ஆப்கானிஸ்தான் அரசு நேரடி பேச்சுவார்த்தைக்கு தலீபான் பயங்கரவாதிகளை அழைத்தது. ஆனால் அவர்களோ அமெரிக்காவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என திட்டவட்டமாக கூறினர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை முழுமையாக விலக்கிகொள்ளும் வரையில் தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் எனவும் அறிவித்தனர்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது.  தொடர்ந்து, கத்தார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சு நேற்று முன்தினம் தொடங்கியது.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டில் தலைநகர் காபூலில் இன்று காலை கார் ஒன்றை வெடிகுண்டுகளை கொண்டு வெடிக்க செய்தும், துப்பாக்கிகளால் சுட்டும் திடீரென பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில் பலர் கொல்லப்பட்டனர்.  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கிறோம் என்று தலீபான் பயங்கரவாத அமைப்பின் சார்பில் ஜபியுல்லா மஜாகித் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.

இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.  அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து வடிவங்களிலான பயங்கரவாதத்திற்கும் பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்கின்றது.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நாங்கள் இரங்கல்களை தெரிவிக்கின்றோம்.  இதுபோன்ற தாக்குதல்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு சீரழிவை ஏற்படுத்தும் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்