சுதந்திர தினத்தில் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.

Update: 2019-07-05 23:45 GMT
சான்பிரான்சிஸ்கோ, 

சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது, வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், மக்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்தனர். 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பயங்கர அதிர்வால் பீதியடைந்த அவர்கள், அலறிஅடித்துக்கொண்டு வீடுகளில் இருந்து வெளியே ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்தன. சாலைகளில் பல்வேறு இடங்களில் பிளவுகள் ஏற்பட்டன. கடைகளிலும், வர்த்தக மையங்களிலும் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்கள் சரிந்து விழுந்து சேதமடைந்தன.

வீடுகளுக்கு நிலத்துக்கு அடியில் கொண்டு செல்லப்படும் சமையல் எரிவாயு குழாயிலும் சேதம் ஏற்பட்டது. இதனால் 2 வீடுகளில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. நிலநடுக்கத்தின் போது அங்குள்ள ஒரு மருத்துவமனை பலத்த சேதம் அடைந்தது. இதனால் அங்கிருந்து நோயாளிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கலிபோர்னியாவில் 1999-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி, ரிக்டர் அளவு கோலில் 7.1 புள்ளிகளாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்