தனது நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி

தனது நாட்டு வான் பரப்பில் பயணிகள் விமானம் பறக்க பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.

Update: 2019-07-16 01:31 GMT
இஸ்லமாபாத்,

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது   ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 பேர் பலியாகினர். இதற்கு  பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத  முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகள் வீசின. 

இதனால், பாகிஸ்தான் வான்வழிப் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி மூடப்பட்டது. இதனால், இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிக எரிபொருள் செலவு ஏற்படுவதோடு, பயண நேரமும் அதிகரிக்கிறது. இதனால், ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் இதுவரை ரூ.430 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை விமானப் படை கடந்த மாதம் நீக்கியது. ஆனால், பாகிஸ்தான் மட்டும் தனது வான் எல்லையை யணிகள் விமான போக்குவரத்துக்கு திறக்கவில்லை.  

இதனால், பயணிகள் விமான போக்குவரத்துக்காக பாகிஸ்தான் தனது வான்வெளி பகுதியை திறக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தது.  இந்த நிலையில், பாகிஸ்தான் தனது வான்பரப்பை பயணிகள் விமான போக்குவரத்திற்காக முழுவதும் திறந்து விட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்டு வந்த பெரும் நிதி இழப்பு தவிர்க்கப்படும். 

மேலும் செய்திகள்