பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்; 9 பேர் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் 6 போலீசார் உள்பட 9 பேர் பலியாகினர்.

Update: 2019-07-21 11:27 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் கொட்லா ஷெய்டான் என்ற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி அமைந்துள்ளது.

இங்கு நேற்று காலை வழக்கம் போல ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் போலீஸ்காரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிர் இழந்தனர். இதற்கிடையில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து, சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ்காரர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டது.

மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்த போலீசார் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆம்புலன்சில் இருந்து போலீஸ்காரர்களின் உடல்களை இறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பெண் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

அங்கு கரும் புகை மண்டலம் உருவானது. குண்டுவெடிப்பில் சிக்கி 4 போலீஸ்காரர்கள் உள்பட 7 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்புடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மருத்துவமனையை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தொடர் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்