ஹாலிவுட் திரைப்படத்தில் வந்த பஸ்சை பார்க்கும் ஆசையில் உயிரை இழந்த புதுமணப்பெண்

ஹாலிவுட் திரைப்படத்தில் வந்த பஸ்சை பார்க்கும் ஆசையில் புதுமணப்பெண் ஒருவர் தனது உயிரை இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2019-07-28 23:15 GMT
நியூயார்க்,

அமெரிக்காவை சேர்ந்த மலையேற்ற வீரரான கிறிஸ்டோபர் மெக்கேண்ட்லஸ் என்பவர் கடந்த 1992-ம் ஆண்டு அலஸ்கா மாகாணத்தில் உள்ள டெனாலி பகுதிக்கு சுற்றுலா சென்றார். நாகரிக வாழ்க்கையில் அலுப்படைந்திருந்த அவர் வித்தியாசமான வாழ்க்கை முறையை தேடி அங்குள்ள தெக்லானிகா ஆற்றை கடந்து காட்டுக்குள் சென்றார்.

ஆனால் சில தினங்களிலேயே அவருக்கு நாகரிக வாழ்க்கைக்கு திரும்பும் எண்ணம் தோன்றியதால் வீட்டுக்கு செல்ல முற்பட்டார். ஆனால் தெக்லானிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அவர் மீண்டும் காட்டுக்குள் திரும்பினார். அங்கு அவர் உடைந்த பஸ் ஒன்றில், உணவின்றி 3 மாதங்களுக்கு மேலாக வசித்து, பின்னர் உயிரிழந்தார்.

அவரது வாழ்க்கையை தழுவி கடந்த 2007-ம் ஆண்டு ‘இன் டூ த வைல்டு’ என்ற ஹாலிவுட் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதனால் அமெரிக்கா வரும் சுற்றுலா பயணிகள் அலஸ்கா மாகாணத்துக்கு சென்று தெக்லானிகா ஆற்றை கடந்து, கிறிஸ்டோபர் வாழ்ந்த பஸ்சை பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில், பெலாரஸ் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற புதுமண தம்பதியான வெராமிக்கா மற்றும் அவரது கணவர் பியோட்டர் மார்க்கிலவ் ஆகியோர் கிறிஸ்டோபர் வாழ்ந்த பஸ்சை பார்ப்பதற்காக அலஸ்காவின் டெனாலி பகுதிக்கு சென்றனர்.

அப்போது, தெக்லானிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாக தெரிகிறது. ஆனால் பஸ்சை பார்த்துவிட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்ததால், இருவரும் ஆற்று வெள்ளத்தில் கயிறு மூலம் கரையை கடக்க முயன்றனர். அப்போது வெள்ளத்தில் எதிர்நீச்சல் அடிக்க முடியாமல், வெராமிக்கா கை நழுவி, ஆற்றில் மூழ்கினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்