அமெரிக்காவில் பரபரப்பு: உணவு திருவிழாவில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி

அமெரிக்காவில் நடந்த உணவு திருவிழாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.

Update: 2019-07-29 04:40 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கில்ராய் நகரில் உலகத்தரம் வாய்ந்த பூண்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதனால் கில்ராய் நகர் ‘உலகின் பூண்டுத் தலைநகரம்’ என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு சுமார் 30 கோடி கிலோ அளவுக்குப் பல வகைப்பட்ட பூண்டுகள் விளைவிக்கப்படுகின்றன.

இதனை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கடைசி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கில்ராய் நகரில் பூண்டுத்திருவிழா நடைபெறும்.

இது அமெரிக்காவில் நடக்கும் உணவுத் திருவிழாக்களிலேயே மிகவும் பிரமாண்டமானதாகும். இசை நிகழ்ச்சி, அழகிப் போட்டி, பேச்சுப்போட்டி, சமையல் போட்டி, கைவினைப்பொருட்கள் விற்பனை, பூண்டு வகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை என பல்வேறு அம்சங்களுடன் பூண்டுத்திருவிழா களைகட்டும்.

ஓவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். அந்த வகையில் 2019-ம் ஆண்டுக்கான பூண்டுத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. வழக்கம் போல் ஆயிரக்கணக் கான மக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றனர்.

திருவிழாவின் இறுதி நாளான நேற்றுமுன்தினம் மக்கள் அனைவரும் ஆடல், பாடல் என உற்சாக வெள்ளத்தில் திளைத்திருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம நபர் தொடர்ந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போன்று சுட்டுத்தள்ளினார்.

இதில் உடலில் குண்டு துளைத்து பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் அதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்