துருக்கியில் நிலநடுக்கம் : ரிக்டரில் 6 ஆக பதிவு

துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள போஸ்கர்ட் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் சேதமடைந்தும் பொதுமக்கள் காயமடைந்தும் உள்ளனர்.

Update: 2019-08-08 13:55 GMT
அங்காரா,

துருக்கி நாட்டின்  மேற்கு பகுதியில் அமைந்துள்ள போஸ்கர்ட் நகரில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.  இதனால், அச்சத்தில் உறைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.  நிலநடுக்கத்தால் வீடுகள் சேதமடைந்தன. இதனால், பொதுமக்கள் காயமடைந்தும் உள்ளனர்.

இந்த நிலநடுக்கம்  போஸ்கர்ட் நகரின் மையப்பகுதியில் ஏற்பட்டதாக துருக்கியின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலநடுக்கத்தால் சில  வீடுகள் சேதமடைந்தன, மேலும் குடிமக்கள் லேசான காயங்களுடன் தப்பித்ததாகவும், சில வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாக  நகர மேயர் பிர்சன் சீலிக் தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பீதியில் தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள் சேதமடைந்த வீடுகளுக்கு திரும்ப செல்ல வேண்டாமென வலியுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்ப்படவில்லை என கூறப்படுகிறது.  

இந்த நிலநடுக்கம் அண்டை மாகாணங்களான அண்டல்யா, முக்லா, இஸ்பார்டா மற்றும் பர்தூரிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, துருக்கியில் 1999 -ஆம் ஆண்டில், 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் வடமேற்கு துருக்கியில் 17,000 க்கும் அதிகமான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்