பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாடு: அமெரிக்க பெண் எம்.பி.க்களுக்கு இஸ்ரேல் பயண தடை

அமெரிக்க பெண் எம்.பி.க்களுக்கு இஸ்ரேல் பயண தடை விதித்துள்ளது.

Update: 2019-08-16 22:56 GMT
ஜெருசலேம்,

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடிக்கிறது. எல்லையில் உள்ள சில பகுதிகளை இருநாடுகளும் சொந்தம் கொண்டாடுவதால் மோதல் வலுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது. சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக ஜனாதிபதி டிரம்ப் அங்கீகரித்தார்.

அதே சமயம் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்களான பாலஸ்தீன வம்சாவளி ரஷிடா ட்லைப் மற்றும் சோமாலியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய இல்ஹான் ஓமர் ஆகிய இருவரும் இஸ்ரேலுக்கு எதிரான இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த சூழலில் இவர்கள் இருவரும் அடுத்தவாரம் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தனர். இந்த பயணத்தின்போது இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன சமாதான ஆர்வலர்களை சந்திக்கவும், ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரை நகரங்களான பெத்லகேம், ரமல்லா மற்றும் ஹெப்ரான் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்கா பெண் எம்.பி.க்கள் இருவரும் இஸ்ரேல் வருவதற்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. பொருளாதாரம், கலாசாரம் அல்லது கல்வி சார்ந்து இஸ்ரேலை குறிவைக்கும் எந்தவொரு புறக்கணிப்பையும் ஆதரிக்கும் வெளிநாட்டினருக்கு நுழைவு விசாக்களை மறுக்க இஸ்ரேலிய சட்டத்தில் இடம் உள்ளது. அதன் அடிப்படையில் ரஷிடா ட்லைப் மற்றும் இல்ஹான் ஓமரின் பயணத்துக்கு தடைவிதிக்கப்பட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்