ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்: 66 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 66 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-08-19 10:21 GMT
காபூல், 

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக சண்டையிட்டு வரும் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. இந்த உள்நாட்டு போரில் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டுவர அங்குள்ள அரசும், அமெரிக்க அரசும் தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் காலூன்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஷியா பிரிவினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் காபூலில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த வெடிகுண்டு தாக்குதலில்,  63 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 182 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றது.

ஆப்கானிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நங்கார்கர் மாகாணத்தில் உள்ள ஜலலாபாத் நகரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. நகரின் பல இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் 66 பேர் காயம் அடைந்ததாக ஆரம்ப கட்ட தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்