பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப்பு

பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். எல்லை தாண்டும் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டனர்.

Update: 2019-08-23 23:30 GMT
சான்டில்லி,

பிரதமர் நரேந்திரமோடி 3 நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக நேற்றுமுன்தினம் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிரெஞ்சு கலாசார பாரம்பரியத்தின் சிறந்த நகராக விளங்குகிற சாட்டோ டி சான்டில்லி நகரில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து இரு தரப்பு தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது.

அதன்பின்னர் இரு தரப்பிலும் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசினர்.

அப்போது பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியதாவது:-

இந்தியாவில் காஷ்மீர் மாநிலம் தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பிரதமர் மோடி என்னிடம் விளக்கினார். அது அவர்களின் இறையாண்மையில் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு பிரச்சினை; அதில் இந்தியாவும், பாகிஸ்தானும்தான் தீர்வு காண வேண்டும். அதில் 3-வது தரப்பு தலையிடவோ அல்லது அந்த பிராந்தியத்தில் வன்முறையை தூண்டிவிடவோ கூடாது என்று நான் அவரிடம் கூறினேன்.

பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் களத்தில் நிலைமை மோசமாவதை தவிர்ப்பதில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பங்கு உண்டு என்று பிரதமர் மோடியிடம் கூறினேன்.

போர் நிறுத்த கோடு பகுதியில் (எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில்) பொது மக்களின் நலன்களும், உரிமைகளும் கவனத்தில் கொள்ளப்படுவதை இரு தரப்பினர் உறுதி செய்ய பிரான்ஸ் கவனமுடன் இருக்கும். அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும், மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சில நாட்கள் கழித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் நான் பேசுவேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று சொல்வேன்.

36 ரபேல் போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முதல் ரபேல் விமானம், அடுத்த மாதம் வழங்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:-

இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையேயான உறவு எந்தவித சுய நலத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் உறுதியான கொள்கைகள் அடிப்படையிலானது ஆகும்.

பயங்கரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியாவும், பிரான்சும் ஒத்துழைப்பை நீட்டிக்கும்.

இந்தியாவும், பிரான்சும் பயங்கரவாதத்தை தொடர்ந்து சந்தித்து வருகின்றன.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் பிரான்சிடம் இருந்து இந்தியாவுக்கு கிடைத்து வருகிற மதிப்புமிக்க ஆதரவுக்கு அதிபர் மேக்ரானுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், தொழில் நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் எழுகிற சவால்களை சந்திப்பதில் பிரான்சும், இந்தியாவும் உறுதிபட நிற்கின்றன.

பிரான்சுடனான உறவில் ராணுவ ஒத்துழைப்பு, முக்கிய தூணாக நிற்கிறது. அடுத்த மாதம் இந்தியா, ரபேல் போர் விமான தொகுதியில் முதல் விமானத்தை பெற்றுக்கொள்ளும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் வெளியிட்ட கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பயங்கரவாதத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பிரான்சிலும், இந்தியாவிலும் நடந்த எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தாக்குதல்கள், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களிலான வெளிப்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

* அல்கொய்தா, ஐ.எஸ்., ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் அவர்களது துணை அமைப்புகளின் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

* உலகமெங்கும் உள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு, இந்தியா முன்மொழிந்தபடி, உலகளாவிய மாநாடு ஒன்றை விரைவாக நடத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

* பயங்கரவாத அமைப்புகளை தடை செய்து அறிவிப்பதற்கு வழி செய்யும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் எண்.1267 மற்றும் தொடர்புடைய தீர்மானங்களை ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் செயல்படுத்த வேண்டும்.

* பிரெஞ்சு, இந்திய கம்பெனிகள் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் பணியினை வலுப்படுத்த இரு நாடுகளும் தீர்மானித்து உள்ளன.

மேலும் செய்திகள்