செக் குடியரசு நாட்டில் மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

செக் குடியரசு நாட்டில் மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2019-09-04 22:10 GMT
பிராக்,

செக் குடியரசு நாட்டை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் கர்ப்பமாகி 15 வாரங்கள் ஆன நிலையில், அவருக்கு திடீரென பக்கவாதம் மற்றும் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தனர். எனினும் அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் தீவிரமாக இறங்கினர். அந்த வகையில், பல்வேறு செயற்கை உபகரணங்களுடன் அப்பெண் வைக்கப்பட்டார்.

அதுமட்டும் இன்றி வயிற்றில் இருக்கும் சிசு சீராக வளரவும், பிரசவத்திற்கு உதவும் வகையிலும் மருத்துவ சாதனங்கள் கொண்டு அப்பெண்ணின் கால்களை அசைத்து, நடைபயிற்சி உள்ளிட்டவையும் அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பலனாக, அந்த பெண் மூளைச்சாவு அடைந்து, 117 நாட்களுக்கு பிறகு தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் 2.13 கிலோ எடையுடன் பிறந்த பெண் குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்